வெயில் படாத இருக்கையை முன்பதிவது எப்படி?

பேருந்தில் இடம்பிடிக்கையில் நம் அனைவருக்குள்ளும் உறங்கும் செல்டன் கூப்பர் விழித்துக்கொள்கிறான். அதுவும் காலியான பேருந்து என்றால் கேட்கவே வேண்டாம். செல்டன் கூப்பர் யாரென்று கேட்பவர்களுக்கு, இதோ “செல்டன் கூப்பர்: ஓர் எளிய அறிமுகம்”.

பேருந்து முன்பதிவு வலைதளங்களில் படத்தைப் பார்த்து எங்கே வெயில் படும் எங்கே படாது என்று உங்களால் சொல்ல முடியுமா? முடியும் என்றால் உங்களுக்கும் இந்தப் பதிவு தேவையில்லை. மற்றவர்கள் மேற்கொண்டு படிக்கவும். வெயில் படாத இடத்தில் முன்பதிவு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உதாரணமாக நான் பெங்களூரிலிருந்து தஞ்சாவூருக்குப் பேருந்தில் முன்பதிந்த கதையைக் கூறுகிறேன். பெங்களூர் வடமேற்கில் இருக்கிறது. தஞ்சாவூர் தென்கிழக்கில் இருக்கிறது. ஆகையால் பெங்களூரிலிருந்து தஞ்சவூருக்கு வரும் தடத்தை உருவகப்படுத்த ஒரு அம்புக்குறியை வரைகிறேன். இந்தத் தடம் வடக்கிலிருந்து தெற்காக வருகிறது. இந்த அம்புக்குறிதான் இப்பொழுது பெங்களூர் ⇌ தஞ்சாவூர்ச் சாலை.

பெங்களூர் தஞ்சவூர் வழி
பெங்களூர் ⇌ தஞ்சாவூர்த் தடம்

நமக்குத் தெரிந்த தகவல்களைத் திரட்டி குறித்துவைத்தாலே சிக்கலுக்கான தீர்வில் பாதியை எட்டிவிடலாம். சில சிக்கல்கள் அதுவாகவே தீர்ந்துகொள்ளும். பொறியியலில் கற்றுக்கொண்ட மிக அடிப்படையான பாடம் இது. நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் இத்தகவல்கள் நன்றாகத் தெரிந்திருக்கும். இந்தத் தகவல்களை எப்படித் தீர்வாக்குவது என்பதைத்தான் பார்க்கப் போகிறோம்.

சூரியனின் பாதை
சூரியனின் பாதை

சூரியன் கிழக்கில் காலை ஆறு மணிக்கு உதித்து மதியம் பன்னிரெண்டு மனிக்கு உச்சியைத்தொட்டு மாலை ஆறுமணிக்கு மேற்கில் மறைகிறது. மேலே உள்ள படத்தில் பிங்க் நிறத்தில் உள்ள அம்புக்குறி சூரியனின் பாதையைக் குறிக்கிறது. வரைபடங்களில் எப்போதுமே  வடக்கு மேலே இருக்கும். கிழக்கு வலது கை பக்கமும் மேற்கு இடது கை பக்கமும் இருக்கும். தெற்கு கீழே இருக்கும். எனவே காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரெண்டு வரை வலமிருந்து இடமாகவும், மதியம் பன்னிரெண்டில் இருந்து மாலை ஆறு மணி வரை இடதுமிருந்து வலமாகவும் வெயில் பேருந்திற்குள் ஊடுருவும்.

பேருந்தினுள் வெயில் புகும் திசைகள்
பேருந்தினுள் வெயில் புகும் திசைகள்

 

இந்தியப் பேருந்து
இந்திய, ஐரோப்பிய பேருந்தின் மாதிரி

இந்தியப் பேருந்துகளை முகப்புப் பக்கம் கீழ்நோக்கியவாரு திருப்பினால், ஓட்டுநர் பக்கம் இடது பக்கமும், நடத்துநர் அமரும் பக்கம் வலது பக்கமும் இருக்கும்.

 

நான் சென்ற பேருந்து காலை நான்கு முப்பது மணிக்குப் புறப்பட்டு மதியம் பதினொன்றறை மணிக்குத் தஞ்சாவூர் வருகிறது. காலை ஆறு மணிவரை சூரியன் இருக்காது. எனவே வெயிலைப் பற்றிக் கவலை இல்லை. ஆறு மணிக்கு மேல், மொத்தப் பயண நேரத்திலும் சூரியன் எங்கு உள்ளது என்று பார்க்க வேண்டும்; கிழக்கில் இருக்கிறது. எனவே வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக வெயில் அடிக்கும். மேலே உள்ள புகைப்படத்தில் பேருந்தைக் கவனித்தால் நடத்துநர் பக்கம் வெயில் அடிப்பது விளங்குகிறது. எனவே நான் ஓட்டுநர் பக்கமாக இடம் பிடித்துக்கொண்டேன். 😉

சில நீட்சிகள்:

  • இதுவே மதியநேரப் பயணமாக இருந்திருந்தால் நடத்துநர் பக்கம் இடம் பிடித்திருப்பேன்.
  • தஞ்சாவூரிலிருந்து பெங்களூருக்குத் திரும்ப வரும்போதுக் காலைநேரப் பயணத்தில் இடதுபுறமும், மாலைநேரப் பயணத்தில் வலதுபுறமும் உட்கரந்திருப்பேன்.
  • பேருந்தின் வழித்தடம் கிழக்கு மேற்காக இருந்தால் பேருந்தின் பின்புறத்தைத் தவிற எங்கு வேண்டுமானாலும் அமரலாம். ஏனெனில் வெயில் பக்கவாட்டில் ஊடுருவாது, முன்பின்னாய் ஊடுருவும்.

இவையாவையும் இருமுறை மனதில் அசைபோட்டுப் பார்த்தால் பழகிவிடும். உலகில் எந்த மூலையில் பயணப்பட்டாலும் வெயில் படாத இடத்தில் அமர்ந்து ஆனந்தமாய் வரலாம்.

ஆனால்… என் பயணத்தின் போது… 😈 !

முகத்தில் சுறீர் வெயில் :-(
முகத்தில் சுறீர் வெயில்

சில நேரங்களில் வெயில் படத்தான் செய்யும். ஏனெனில்,

வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோகக் கூந்தலோ

😀

நாம் பேருந்துத் தடத்தை ஒரு நேர்கோடிட்டு உருவகப்படுத்தினோம் அல்லவா? உண்மையான தடம் அப்படி இருக்காதல்லவா? இந்த நேர்கோட்டிலிருந்துப் பேருந்து எப்போதெல்லாம் விலகி எதிர்த்திசையில் பயணிக்கிறதோ அப்போதெல்லாம் வெயில் அடிக்கும்.

ஆனால் இந்த விலகல் பயணத்தில் தோராயமாக பத்து சதவிகிதம் மட்டுமே இருக்கும்.

மேலும் அன்றய வானிலை அறிக்கை துல்லியமாகக் கிடைத்தால், மழை பெய்தால் ஒழுகாத இடத்தைக்கூட தேர்ந்தெடுத்துப் பயணப்படலாம். கோணவியல்(Trignometry), வளைப்பொருத்துதல்(Curve Fitting) இதெல்லாம் பயன்படுத்தினால் உங்கள் உடம்பில் எவ்வளவு தூரம் வெயில் படும், எவ்வளவு நேரம் படும் என்பதையெல்லாம் இன்னும் துல்லியமாகக் கணிக்கலாம்.  ஆனால் உங்கள் இலகு கருதி இத்துடன் இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி. வணக்கம்.

3 thoughts on “வெயில் படாத இருக்கையை முன்பதிவது எப்படி?

  1. அருமை. இது போன்ற பயனுள்ள கட்டுரைகளை இன்னும் எழுதுங்கள். பேருக்கு பொறியியல் படித்தவிட்டு வேலைக்கு செல்பவர்கள் மத்தியில், இதுபோன்று கற்றுக் கொண்ட பொறியியலை வாழ்க்கையில் எப்படி apply செய்வது என்று எளிமையாக சொல்லியிருக்கின்றீர்கள். இந்தியாவில் இது போன்ற சிறு Michia Kaku, Stephen Hawking எல்லாம் இருப்பது மகிழ்ச்சியே! தொடரட்டும்…

Leave a Reply

Your email address will not be published.