சிற்றூர்தி நெரிசலில் யூக்கலிப்டஸ் வாசனை;
நேற்று பொழிந்த மழை.
Month: May 2014
லினக்ஸ்.காமில் எனது பேட்டி
இந்த எளியவனின் கருத்து linux.com இன் இன்றய சிறப்புக் கட்டுரையில் (May 15, 2014) வெளிவந்திருக்கிறது.
கட்டுரையின் உரலி: http://www.linux.com/news/enterprise/biz-enterprise/772853-linux-jobs-today-a-special-report
வடசொல்லுக்கு வல்லினம் மிகுமா?
இந்தக் கீச்சிலிருந்து தான் விவாதம் ஆரம்பித்தது. நன்பர் KRS அவர்கள் நிறைய கேள்விகளை முன்வைத்தார். அவருக்கு மறுமொழி கூறுவதே இப்பதிவின் நோக்கம் (திறந்த மடல்). முழுவிவாதத்தைப் பார்க்க கீழே கீச்சில் உள்ளத் தேதியைச் சொடுக்கவும்.
@kryes //தமிழ்ச் சினிமா// ச் வரக்கூடாதே…
— Suren ? (@surenify) April 29, 2014
தமிழ்ச் சினிமாவா? தமிழ் சினிமாவா? அதற்குச் செல்லும் முன்னர். சில அடிப்படை விளக்கங்கள் தரவேண்டியுள்ளது.
எழுத்து
எழுத்து என்பது என்ன? நன்னூலில் இது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
மொழி முதல் காரணம் ஆம் அணு திரள் ஒலி எழுத்து - நன்னூல், 2.1.1:58
விளக்கம்: எழுத்து என்பது ஒலியணுக்கள் திரள்ந்து உருவாகும் ஓசை. இதுவே மொழிக்கு முதல் காரணம்.
ஆனால் பலர், எழுத்தின் வரிவடிவத்தையே எழுத்தாகப் பார்க்கின்றனர். இது தவறு. ஒலியை தான் எழுத்தாகக் கொளல் வேண்டும். வரிவடிவம், எழுத்தைக் குறிக்கும் ஒரு சின்னம் மட்டுமே.
தொல்காப்பியர் எழுத்து என்பது என்ன என்ற விளக்கத்தை நேரடியாகச் சொல்லவில்லை. ஆனால் ஓசைதான் என்பதைத் தொல்காப்பியம் முழுக்கவும் வலியுறுத்துகிறார். அனைத்தையும் கூற விழைந்தால் முழு தொல்காப்பியத்தையும் மேற்கோளிட வேண்டும். தொல்காப்பியம் முழுக்கவும் இசைப, மொழிப என்று வருகிறது. எழுத்திற்கு கால அளவை வரையறுக்கிறார். குறுக்கம், நீட்டம் பற்றி பேசுகிறார். இவை அனைத்தும் உச்சரிப்புக்கு உள்ள குணங்கள் அல்லவா?
இப்போது உங்கள் கேள்வி.
@ssurenr புணர்ச்சி: எழுத்தாகப் பார்த்தல் தவறு, ஒலியாக மட்டுமே பார்க்க வேணும் என்பதற்கு உங்கள் நேரடி ஆதாரம்/தரவு என்ன? Give that! 4/
— KRS | கரச (@kryes) April 29, 2014
மொழிக்கே ஒலிதான் மூலம் எனும்போது புணர்ச்சி மட்டும் என்ன விதிவிலக்கா? புணர்ச்சி, குறுக்கம், அளபெடை, தொகை, யாப்பு அனைத்தையுமே ஒலியாக மட்டுமே கொள்ளவேண்டும். அப்ப எழுத்தாகக் கொள்ளக்கூடாதா? எழுத்தும் ஒலியும் ஒன்னு தானே. ஒலி தான் எழுத்து. எழுத்து தான் ஒலி. வேறு வேறல்ல. மேலே சுட்டியிருக்கும் நன்னூல் மேற்கோளே சான்று.
இவ்வளவு ஏன்? புணர்ச்சி பற்றி பேசும்போது நிலைமொழி வருமொழி என்று தானே கூறுகிறார்கள்? இங்கு மொழி என்பதன் பொருள் உச்சரிப்பு தானே. புணர்ச்சியை ஒலியாக மட்டுமே பார்க்கவேண்டும் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?
வல்லினம்
‘ச’ என்னும் சின்னம் cha,sa,sha என்று மூன்று எழுத்துக்களையும் இந்நாளில் குறிக்கப் பயன்படுகிறது. எனினும் இம்மூன்றில் எந்த ஒலி வல்லினம் என்பதைத்தான் ஆராய வேண்டியுள்ளது.
க, ச, ட, த, ப, ற இவை ஆறும் வல்லினம். இவற்றின் உச்சரிப்புக்களை தொல்காப்பியர் பிறப்பியலில் காட்டுகிறார். இங்கு நமக்குத் தேவானது ச வின் பிறப்பு.
சகார ஞகாரம் இடை நா அண்ணம். - தொல்காப்பியம் 1.3:8
விளக்கம்: ச,ஞ பிறக்கும் போது நாக்கின் நடுப்பகுதி மேல்வாயைத்தொட்டுப் பிறக்கும்.
எனவே ச என்னும் எழுத்து CHA என்னும் ஒலியை மட்டுமே குறிக்கும். ஆக CHA என்னும் ஒலி மட்டும்தான் வல்லினம். SA-வும் SHA-வும் இப்படிப் பிறப்பதில்லை. வலித்தும் ஒலிப்பதில்லை. தொல்காப்பியர் நடையில் கூறினால் இவை இரண்டும் “நுனி நா அண்ணம்”.
ச என்னும் எழுத்தின் வரிவடிவத்தை மட்டும் வைத்துக் கொண்டு, இந்த வரிவடிவம் எந்தெந்த ஒலிகளைக் குறிக்கிறதோ அவையெல்லாம் வல்லினம் என்று கூறுவது தவறு.
@ssurenr சினிமா, சரஸ்வதி, சண்முகம்= இதில் வரும் ச -ல்லாம் வல்லின எழுத்து, Irrespective of the ஒலிப்பு! வல்லின எழுத்தில் கசதப மிகும் 1/
— KRS | கரச (@kryes) April 29, 2014
நீங்கள் கூறுவது போல் அனைத்து உச்சரிப்பும் வல்லினம் ஆகாது.
புணர்ச்சி
@ssurenr தொல்காப்பியம் எதுக்கா? ஒங்க "உச்சரிப்பே" போதுமா?:)
—
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வாய் மிகும்! So, Plz give me the Standards!— KRS | கரச (@kryes) April 29, 2014
இது நடைமுறையில் பலர் பின்பற்றும் ஒன்றுதான். உச்சரித்துப் பார்த்து வல்லினம் மிகுமா மிகாதா என்று சரிபார்ப்பது. சரியான உச்சரிப்பில் படித்தால் வல்லினம் மிகுவதைத் தவிர்க்க முடியாது. அது இயற்கையாக நிகழும் ஒன்று.
இந்த இயற்கை நிகழ்வைத்தான் தொல்காப்பியர் இலக்கணமாக வடித்துள்ளார். தொல்காப்பியரே பல இடங்களில் இதை நேரடியாக எழுதியுள்ளார். இரண்டு மட்டும் இங்கே.
தம் ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை. - தொல்காப்பியம் 1.7:58
ஒற்று இடை மிகா வல்லெழுத்து இயற்கை. - தொல்காப்பியம் 1.7:61
மிகுமா மிகாதா?
நீங்கள் ‘சினிமா’ என்னும் சொல்லை chinimaa என்று வல்லின ஒலியுடன் உச்சரித்தால் மட்டுமே வல்லினம் மிகலாம். ஆனால் sinimaa என்று உச்சரித்தால் நிச்சயமாக வல்லொற்று இடுவது தவறு. ஏனெனில் ‘si’ வல்லெழுத்தல்ல.
நீங்கள் சுட்டியிருக்கும் தொல்காப்பிய மேற்கோள் பற்றி பேசுவோம்.
வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே. சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். - தொல்காப்பியம் 2.9:5,6
வடசொல்லைப் பயன்படுத்தும்போது, அந்தச் சொல்லில் உள்ள வடவெழுத்துக்களை மட்டும் நீக்கி, அதற்கு இனையான தமிழ் எழுத்தை இடச்சொல்லுகிறார். இந்த மாற்றத்தில் உச்சரிப்பு சிதைந்தாலும் கிரந்த குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதமாடார்கள் என்று கூறுகிறார். இங்கு தமிழ் எழுத்தாக மாற்றப்பட்ட வட எழுத்து வட சொல்லில் சேர்ந்து (புணர்ந்து) ஒலிப்பதைத் தான் கூறுகிறார். அப்படி மாற்றப்பட்ட வடசொல் மற்ற சொற்களுடன் புணர்வது பற்றி அவர் இங்கு பேசவில்லை.
சுருக்கமாக sinimaa என்ற சொல் chinimaa என மாறும் என்று கூறுகிறார். ஆனால் இன்று பிரச்சனையே sinimaa, shinimaa, chinimaa மூன்றையுமே இந்தக் குறியீட்டில்தான் குறிக்கிறோம் – ‘சினிமா’. இந்தப் பயன்பாடு சர்சைக்குரியது. இதைப் பற்றிய திரு. சொக்கன் பதிந்திருக்கிறார்.
இந்தக் குழப்பம், ஒலியை எழுத்தாகப் பார்க்காமல், சின்னத்தை எழுத்தாகப் பார்த்தமையால் வந்த வினை.
உலகத்தோடு ஒட்ட ஒழுகுவதா(சி=’chi,si,shi’) இல்லை தொல்காப்பியர் வழி நிற்பதா(si,shi=>சி=>chi) என்பது அறிஞர் பெருமக்கள்(தமிழர் மட்டும்) ஆய்விற்கு உட்படுத்தி தெளிவுபடுத்தப்பட வேண்டிய ஒன்று. அதுவரை வல்லொற்று இடுகையில், ஒலிப்பையும் கவனிப்போமாக.
அல்லது சினிமாவைத் தவிர்த்து திரைப்படம் என எழுதி கிரந்தம் தவிர்ப்போமாக.
எதிர்வழக்காடுகிறேன் என்று என்னையும் தவறாகக் கொள்ள வேண்டாம் 🙂
நன்றி.