அமேசானுக்குத் தமிழ் மொழி மேல் அப்படியென்ன மெத்தனமோ? புதிதாக கின்டில் பேப்பர்வைட் வாங்கி, ஆவலுடன் பிரித்து, ஒரு தமிழ் மின்னூலை தரவேற்றிப் படிக்க முனைந்தபோது பெருத்த ஏமாற்றம். மிக மோசமான எழுத்துரு!
இந்த எழுத்துருவின் பழமையான வடிவம் கவர்ச்சியைத் தந்தாலும், நிறைவடையாத அரைகுரை இது. பல இடங்களில் மெருகேற்றம் தேவை.
நல்லவேளையாக, இந்த எழுத்துருத் தொல்லையை நிவர்த்தி செய்வது மிக எளிது. அமேசான், கின்டில் எழுத்துருக்களைத் தனிப்பயனாக்க ஒரு மறைமுக வழியை வைத்துள்ளது. அதன்படி இதற்குத் தேவையான கோப்புகளை zip வடிவில் இங்கே தரவேற்றியுள்ளேன்.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இந்த zip கோப்பை அவிழ்த்து, அதில் உள்ள அடக்கங்களை உங்கள் கின்டிலுக்குக் கணினியின் உதவியுடன் மாற்றிவிட வேண்டியதுதான்.
உங்கள் கின்டிலில் ஏற்கனவே உள்ள documents கோப்புறையைத் தவிர்த்து, புதிதாக fonts என்கிற கோப்புறையும், USE_ALT_FONTS என்கிற கோப்பும் இருக்கவேண்டும். இவற்றை உறுதி செய்தபின், கின்டிலை ஒருமுறை மறுதுவக்குங்கள். இதன் பின்னர் தமிழ் எழுத்துக்கள் புதிய எழுத்துருவில் தோன்றும்.
இந்த புதிய எழுத்துரு புத்தகத்தில் உள்ள தடிமன், சாய்மானம் ஆகியவற்றைக் கையாள வல்லது. மேலே உள்ள படங்களில் தலைப்புகளை உற்று நோக்கினால் வேறுபாட்டைக் காணலாம். இப்போது எழுத்துக்களின் அளவை தேவைக்கேற்ப மாற்றி படிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.
உங்கள் புதிய கின்டிலுடன் தமிழ்க்கடலில் நீந்திக் களிக்க வாழ்த்துக்கள்.