வடசொல்லுக்கு வல்லினம் மிகுமா?

இந்தக் கீச்சிலிருந்து தான் விவாதம் ஆரம்பித்தது. நன்பர் KRS அவர்கள் நிறைய கேள்விகளை முன்வைத்தார். அவருக்கு மறுமொழி கூறுவதே இப்பதிவின் நோக்கம் (திறந்த மடல்). முழுவிவாதத்தைப் பார்க்க கீழே கீச்சில் உள்ளத் தேதியைச் சொடுக்கவும்.

தமிழ்ச் சினிமாவா? தமிழ் சினிமாவா? அதற்குச் செல்லும் முன்னர். சில அடிப்படை விளக்கங்கள் தரவேண்டியுள்ளது.

எழுத்து

எழுத்து என்பது என்ன? நன்னூலில் இது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

மொழி முதல் காரணம் ஆம் அணு திரள் ஒலி 
எழுத்து
- நன்னூல், 2.1.1:58

விளக்கம்: எழுத்து என்பது ஒலியணுக்கள் திரள்ந்து உருவாகும் ஓசை. இதுவே மொழிக்கு முதல் காரணம்.

ஆனால் பலர், எழுத்தின் வரிவடிவத்தையே எழுத்தாகப் பார்க்கின்றனர். இது தவறு. ஒலியை தான் எழுத்தாகக் கொளல் வேண்டும். வரிவடிவம்,  எழுத்தைக் குறிக்கும் ஒரு சின்னம் மட்டுமே.

தொல்காப்பியர் எழுத்து என்பது என்ன என்ற விளக்கத்தை நேரடியாகச் சொல்லவில்லை. ஆனால் ஓசைதான் என்பதைத் தொல்காப்பியம் முழுக்கவும் வலியுறுத்துகிறார். அனைத்தையும் கூற விழைந்தால் முழு தொல்காப்பியத்தையும் மேற்கோளிட வேண்டும். தொல்காப்பியம் முழுக்கவும் இசைப, மொழிப என்று வருகிறது. எழுத்திற்கு கால அளவை வரையறுக்கிறார். குறுக்கம், நீட்டம் பற்றி பேசுகிறார். இவை அனைத்தும் உச்சரிப்புக்கு உள்ள குணங்கள் அல்லவா?

இப்போது உங்கள் கேள்வி.

மொழிக்கே ஒலிதான் மூலம் எனும்போது புணர்ச்சி மட்டும் என்ன விதிவிலக்கா? புணர்ச்சி, குறுக்கம், அளபெடை, தொகை, யாப்பு அனைத்தையுமே ஒலியாக மட்டுமே கொள்ளவேண்டும். அப்ப எழுத்தாகக் கொள்ளக்கூடாதா? எழுத்தும் ஒலியும் ஒன்னு தானே. ஒலி தான் எழுத்து. எழுத்து தான் ஒலி. வேறு வேறல்ல. மேலே சுட்டியிருக்கும் நன்னூல் மேற்கோளே சான்று.

இவ்வளவு ஏன்? புணர்ச்சி பற்றி பேசும்போது நிலைமொழி வருமொழி என்று தானே கூறுகிறார்கள்? இங்கு மொழி என்பதன் பொருள் உச்சரிப்பு தானே. புணர்ச்சியை ஒலியாக மட்டுமே பார்க்கவேண்டும் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?

வல்லினம்

‘ச’ என்னும் சின்னம் cha,sa,sha என்று மூன்று எழுத்துக்களையும் இந்நாளில் குறிக்கப் பயன்படுகிறது. எனினும் இம்மூன்றில் எந்த ஒலி வல்லினம் என்பதைத்தான் ஆராய வேண்டியுள்ளது.

க, ச, ட, த, ப, ற இவை ஆறும் வல்லினம். இவற்றின் உச்சரிப்புக்களை தொல்காப்பியர் பிறப்பியலில் காட்டுகிறார். இங்கு நமக்குத் தேவானது ச வின் பிறப்பு.

சகார ஞகாரம் இடை நா அண்ணம். 
- தொல்காப்பியம் 1.3:8

விளக்கம்: ச,ஞ பிறக்கும் போது நாக்கின் நடுப்பகுதி மேல்வாயைத்தொட்டுப் பிறக்கும்.

எனவே ச என்னும் எழுத்து CHA  என்னும் ஒலியை மட்டுமே குறிக்கும். ஆக CHA என்னும் ஒலி மட்டும்தான் வல்லினம். SA-வும் SHA-வும் இப்படிப் பிறப்பதில்லை. வலித்தும் ஒலிப்பதில்லை. தொல்காப்பியர் நடையில் கூறினால் இவை இரண்டும் “நுனி நா அண்ணம்”.

ச என்னும் எழுத்தின் வரிவடிவத்தை மட்டும் வைத்துக் கொண்டு, இந்த வரிவடிவம் எந்தெந்த ஒலிகளைக் குறிக்கிறதோ அவையெல்லாம் வல்லினம் என்று கூறுவது தவறு.

நீங்கள் கூறுவது போல் அனைத்து உச்சரிப்பும் வல்லினம் ஆகாது.

புணர்ச்சி

இது நடைமுறையில் பலர் பின்பற்றும் ஒன்றுதான். உச்சரித்துப் பார்த்து வல்லினம் மிகுமா மிகாதா என்று சரிபார்ப்பது.  சரியான உச்சரிப்பில் படித்தால் வல்லினம் மிகுவதைத் தவிர்க்க முடியாது. அது இயற்கையாக நிகழும் ஒன்று.

இந்த இயற்கை நிகழ்வைத்தான் தொல்காப்பியர் இலக்கணமாக வடித்துள்ளார். தொல்காப்பியரே பல இடங்களில் இதை நேரடியாக எழுதியுள்ளார். இரண்டு மட்டும் இங்கே.

தம் ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை.
- தொல்காப்பியம் 1.7:58
ஒற்று இடை மிகா வல்லெழுத்து இயற்கை.
- தொல்காப்பியம் 1.7:61

மிகுமா மிகாதா?

நீங்கள் ‘சினிமா’ என்னும் சொல்லை chinimaa என்று வல்லின ஒலியுடன் உச்சரித்தால் மட்டுமே வல்லினம் மிகலாம். ஆனால் sinimaa என்று உச்சரித்தால் நிச்சயமாக வல்லொற்று இடுவது தவறு. ஏனெனில் ‘si’ வல்லெழுத்தல்ல.

நீங்கள் சுட்டியிருக்கும் தொல்காப்பிய மேற்கோள் பற்றி பேசுவோம்.

வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்.  
- தொல்காப்பியம் 2.9:5,6

வடசொல்லைப் பயன்படுத்தும்போது, அந்தச் சொல்லில் உள்ள வடவெழுத்துக்களை மட்டும் நீக்கி, அதற்கு இனையான தமிழ் எழுத்தை இடச்சொல்லுகிறார். இந்த மாற்றத்தில் உச்சரிப்பு சிதைந்தாலும் கிரந்த குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதமாடார்கள் என்று கூறுகிறார். இங்கு தமிழ் எழுத்தாக மாற்றப்பட்ட வட எழுத்து வட சொல்லில் சேர்ந்து (புணர்ந்து) ஒலிப்பதைத் தான் கூறுகிறார். அப்படி மாற்றப்பட்ட வடசொல் மற்ற சொற்களுடன் புணர்வது பற்றி அவர் இங்கு பேசவில்லை.

சுருக்கமாக sinimaa என்ற சொல் chinimaa என மாறும் என்று கூறுகிறார். ஆனால் இன்று பிரச்சனையே sinimaa, shinimaa, chinimaa மூன்றையுமே இந்தக் குறியீட்டில்தான் குறிக்கிறோம் – ‘சினிமா’. இந்தப் பயன்பாடு சர்சைக்குரியது. இதைப் பற்றிய திரு. சொக்கன் பதிந்திருக்கிறார்.

இந்தக் குழப்பம், ஒலியை எழுத்தாகப் பார்க்காமல், சின்னத்தை எழுத்தாகப் பார்த்தமையால்  வந்த வினை.

உலகத்தோடு ஒட்ட ஒழுகுவதா(சி=’chi,si,shi’) இல்லை தொல்காப்பியர் வழி நிற்பதா(si,shi=>சி=>chi) என்பது அறிஞர் பெருமக்கள்(தமிழர் மட்டும்) ஆய்விற்கு உட்படுத்தி தெளிவுபடுத்தப்பட வேண்டிய ஒன்று. அதுவரை வல்லொற்று இடுகையில், ஒலிப்பையும் கவனிப்போமாக.

அல்லது சினிமாவைத் தவிர்த்து திரைப்படம் என எழுதி கிரந்தம் தவிர்ப்போமாக.

எதிர்வழக்காடுகிறேன் என்று என்னையும் தவறாகக் கொள்ள வேண்டாம் 🙂

நன்றி.

12 thoughts on “வடசொல்லுக்கு வல்லினம் மிகுமா?

 1. வணக்கம் சுரேந்தர்
  காலந் தாழ்த்தியமைக்கு மன்னிக்கவும்:)
  ஒரே பணி நிமித்த ஊர் சுற்றல்..

  உங்கள் தரவுகளுக்கு ஒவ்வொன்றாய் வந்து, எது சரியான தரவோ, அங்கே என்னைத் திருத்திக் கொள்கிறேன்; நன்றி இந்த வாய்ப்புக்கு!

  1. //ஒலி தான் எழுத்து. எழுத்து தான் ஒலி. வேறு வேறல்ல. நன்னூல் மேற்கோளே சான்று//

  எழுத்தும் ஒலியும் வெவ்வேறு அல்ல என்றால்..
  = ச எழுத்து
  *சென்னை = Chennai என்றும் ஒலிக்கிறது
  *இசை = Isai என்றும் ஒலிக்கிறதே! இது எப்படி?:)

  = த எழுத்து
  *தண்ணீர் = thaneer என்றும்
  *முந்து = Mundhu என்றும் ஒலிக்கிறதே! இது எப்படி?:)

  எழுத்தும் ஒலியும் வேறு வேறல்ல?:)

  1. உங்கள் அடிப்படைக் கருத்து எனக்குப் புரிகிறது
   *சினிமா என்னாமல், திரைப்படம் என்னலே நலம்

   *Sanskrit sa sounds,
   வலிந்து தமிழில் cha sounds ஆகப் புழங்கினால்,
   அவையே தமிழ்ச் சொற்கள் “போல்”
   இங்கு தங்கி விடும் “அபாயம்” உள்ளது என்ற உங்கள் கருத்தும் மிகச் சரியானதே!

   ஆனால், இது “அபாயம்” அல்ல! Opportunity!
   ஏன், தொல்காப்பியர் இப்படிச் செய்தார்? என்பதையும் சற்று விரிவாய் விளக்குகிறேன்..

   அதற்கு முன், புரிதலுக்கான எல்லைக் கோடுகள்;
   தமிழின் பால், உங்கள் நன் “நோக்கம்” புரிந்து கொண்டேன் என்று சொல்லவே, இப்பின்னூட்டம்

 2. ஒலியே = மொழிக்கு அடிப்படை!
  இதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது!

  மொழி முதல் காரணம் ஆம்
  அணு திரள் ஒலி எழுத்து
  – என்ற உங்கள் நன்னூல் மேற்கோள் சரியே!

  ஆனால், ஆனால்..
  முதல் காரணம் என்று இருக்கும் போது
  இரண்டாம் காரணம் என்றும் உண்டல்லவா?
  அந்த இரண்டாம் காரணம் தான் = எழுத்து!

  மொழியின் மூலம் = ஒலியே!
  ஆனா, ஒலியே “போதும்”-ன்னு சொல்லீற முடியாது!

  ஆதி குடிகள்= ஒலியே!

  ஆனா ஒரு மொழி: “ஒலி” நிலையில் இருந்து, “செம்மை” நிலைக்கு வர
  1.ஒலி
  2.எழுத்து
  3.சொல்
  4.பொருள்

  நன்னூல் பின்பு வந்த நூல்!
  (அதில் தமிழ் நெறிக்கு மாறுபட்ட சிலவும் உண்டு; சம்ஸ்கிருத/ வடசொற் கலப்பும் உண்டு
  நன்னூல் நன் நூலா? = மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் கட்டுரையும் பார்க்கவும்)

  தொல்காப்பியம்= தமிழுக்கு அடிப்படை!
  Like an Unix OS, Operating System for Tamizh Language!

  அதனால் தான் தொல்காப்பியர்,
  நன்னூல் போல, முதற் காரணம் ஒலியே-ன்னு ல்லாம் Linearஆக ஆரம்பிக்காம.. இயல்பாகப் பரிணமிக்கிறார்!

  “பொருள்” தான் List-இல் கடைசி;
  அதுக்காக, “ஒலி” மட்டுமே அடிப்படை! எழுத்து, பொருள் -ல்லாம் அடிப்படை இல்லை-ன்னு சொல்லீற முடியுமா?:)

  எல்லாச் சொல்லும் “பொருள்” குறித்தனவே
  = இது தொல்காப்பியப் புரட்சி!
  நீங்க “சொய்ங்” என்ற சொல் உருவாக்கினாலும், அதுக்கும் பொருள் உண்டு:)

  ஏன்?
  ஏன்னா = அது உங்க “உணர்ச்சி”!
  மொழிக்கு= உணர்ச்சியே அடிப்படை! ஒலி அல்ல!

  உணர்ச்சி -> ஒலி ஆகி
  ஒலி -> எழுத்து ஆகும்!
  பல எழுத்து -> சொல் ஆகும்
  = இவை அனைத்தும் **பொருள்** ஆகும்!

  *உங்க உணர்ச்சியே = பொருள்!
  *அதை வெளிக்காட்டும் உத்திகளே = ஒலி-எழுத்து-சொல்
  ———-

  இப்போ தெரியுதா, எதுக்கு தொல்காப்பியர் நன்னூல் போல ஆரம்பிக்கலை-ன்னு?:))

  1. //ஒலியே எழுத்து! எழுத்தே ஒலி//

   அன்று!
   சொல்லே பொருள், பொருளே சொல் -ன்னு சொல்லுவோமா?
   = ஒரு பொருட் பன்மொழி உண்டே!

   அதே போல்,
   = ஓர் எழுத்து, சில் ஒலி உண்டு!

   சென்னை (cha) | இசை (sa)
   கந்தன் (ka) | வங்கம் (ga)
   தண்ணீர் (tha) | முந்து (dha)

   Context Based Sounds in தமிழ்!
   (Like English)
   ka, kha, ga, gha -ன்னு ஒவ்வோர் ஒலிக்கும் எழுத்தை ஆக்கி,
   ஐய்யோ இவ்ளோ எழுத்தா? -ன்னு பட்டியலை நீட்டாம, Context based & Simplicity!

   தமிழில் 247 எழுத்துக்கள் என்பது மிகைக் கூற்று!
   தமிழ் is Simple!
   12 + 18 + 1
   = 31 எழுத்துக்களே!

   //எழுத்தே ஒலி, ஒலியே எழுத்து// -ன்னா…

   குற்றியலுகரம், குற்றியலிகரம்
   எல்லாத்துக்குமே தனித்தனி எழுத்து தான் உருவாக்கணும்:))
   ஒவ்வொன்னும் ஒவ்வோர் ஒலி!
   ——-

   //நிலைமொழி வருமொழி என்று தானே கூறுகிறார்கள்?
   இங்கு மொழி என்பதன் பொருள், உச்சரிப்பு தானே//

   :)))))
   மொழி= சொல்!
   நிலைச் சொல், வரும் சொல்!

   ஒலி மீதுள்ள அதீத காதலால், இப்படிச் சொல்லி விட்டீர்கள்:))

   //புணர்ச்சியை ஒலியாக மட்டுமே பார்க்கவேண்டும் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?//

   ha ha ha!
   நன்னூல், சொல்லாததையெல்லாம், நீங்களாச் சேர்த்துச் சேர்த்து எடுத்துக் கொண்டீர்கள்:))

   மொழியின் முதல் காரணம்= ஒலியே -ன்னு மட்டுமே, நன்னூல் சொல்லிற்று!
   தொல்காப்பியர், அதைக் கூடச் சொல்லாமல், இயற்கையாகப் பரிணமிக்கிறார்!

   நீங்க, தரவு தரணுமே என்ற கட்டாயத்தில்..
   நன்னூலை = அதி பயங்கரமாக Stretch செய்து விட்டீர்கள்:)))))))))))

 3. //‘ச’ என்னும் சின்னம் cha,sa,sha என்று மூன்று எழுத்துக்களையும் இந்நாளில் குறிக்கப் பயன்படுகிறது//

  ஷ, ஸ, ஶ = கிரந்த எழுத்துக்களைத் தற்சமயம் விட்டுருவோம்!

  ச என்னும் சின்னம் (அ) எழுத்து
  cha/sa இரண்டையுமே குறிக்கும்;

  இந்நாளில் மட்டுமல்ல, தொல் பழங் காலம் தொட்டே!
  “இசை” என்பதில் ச சின்னம்= sa அல்லவா!

  வெடிப்பொலி/ உரசல் ஒலி = இரண்டுக்குமே அதே ச சின்னம் தான்:)

  சகார ஞகார இடை நா அண்ணம் – என்று தொல்காப்பியம்!
  The sound of ச = cha or sa?
  http://dosa365.wordpress.com/2012/08/14/6/

  தொல்காப்பியப் பிறப்பியல்:
  ச ஒலி = இடை நா, அண்ணத்தைத் தொடப் பிறக்கும்! = Cha
  ஆனா, “இசை”யில் உள்ள ச ஒலி, sa ஆயிற்றே, இது எப்படி???

  அதற்கும் தொல்காப்பியரே துணை! = அவரே நம் தமிழ்த் தலைவன்; மூத்த குடிமகன்!

  தம்தம் “திரிபே” சிறிய என்ப
  ககார ஙகாரம் முதல் நா அண்ணம்
  சகார ஞகாரம் இடை நா அண்ணம்

  இப்படி, திரிபு எ புறனடைகளும் (exception) உண்டு!
  = எடுத்தல், படுத்தல், நலிதல், உறழ்தல்
  = இப்படி, ஒரே எழுத்து சற்றே ஓசை மாறி ஒலிக்கும்
  அதான், தத்தம் திரிபே, “சிறிய” என்றார்; ச Chennai/ Isai

  அவ் ஆறு எழுத்தும் மூவகைப் பிறப்பின
  -என்றும் இன்னும் விளக்குவார் தொல்காப்பியர்!

  இரண்டு ஒலி முதலாக இணைத்துக் கூறப்பெறும் எழுத்து;
  வளியிசையின் வேறுபட்டு இரண்டாக நின்றனவன்றிப் பிறப்பிட முயற்சியான் ஒரு தன்மையவே எனப் புறனடை கூறுகின்றது
  ——-

  //ச என்னும் எழுத்தின் வரிவடிவத்தை மட்டும் வைத்துக் கொண்டு, இந்த வரிவடிவம் எந்தெந்த ஒலிகளைக் குறிக்கிறதோ அவையெல்லாம் வல்லினம் என்று கூறுவது தவறு//

  :)))
  ச = வரி வடிவம்!
  அதன் ஒலி = cha & sa
  இந்த இரண்டுமே = வல்லினம் தான்!

  Pl refer the தொல்காப்பியம் & புறனடை together, that I gave: Thanks:)

 4. //நீங்கள் ‘சினிமா’ என்னும் சொல்லை chinimaa என்று வல்லின ஒலியுடன் உச்சரித்தால் மட்டுமே வல்லினம் மிகலாம்
  ஆனால் sinimaa என்று உச்சரித்தால் நிச்சயமாக வல்லொற்று இடுவது தவறு. ஏனெனில் ‘si’ வல்லெழுத்தல்ல//

  Fyi
  நான், தமிழ்ச் சினிமா என்று எழுதுங்கால், tamizh chinimaa என்றே ஒலிக்கிறேன் (உச்சரிக்கிறேன்:)))

  ஆனால்,
  “ஒலி” அடிப்படையில் மட்டுமே வல்லினம் என்ற உங்கள் வாதம் பிழை
  என்று சான்று காட்டவே இத்துணையும் கூறினேன்; பொறுத்தருள்க!:)

  (letz forget sanskrit words for now)
  ச = Both Cha & Sa in தமிழ்
  *சென்னை = Cha வும் வல்லினமே!
  *இசை = Sa வும் வல்லினமே!
  ——–
  ஆதாரம்: “தொல்காப்பியம் & புறனடை”

  சகார ஞகாரம் இடை நா அண்ணம்
  தம்தம் திரிபே சிறிய என்ப
  அவ் ஆறு எழுத்தும் மூவகைப் பிறப்பின

  வளியிசையின் வேறுபட்டு இரண்டாக நின்றனவன்றிப்
  பிறப்பிட முயற்சியான் ஒரு தன்மையவே எனப் புறனடை!
  (இளம்பூரணர் & நச்சினார்க்கினியர் உரையும் காண்க)

 5. After the break:)))

  //வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
  எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே//

  இதை எதுக்குச் சொன்னேன்-ன்னா..
  ஒலி-எழுத்து (உங்க மொழியில்: சின்னம்:))
  அந்த வேறுபாட்டுக்குத் தான் சொன்னேன்;

  ஆனா இந்த நூற்பா காட்டும் அடிப்படைக் குறிக்கோள் வேற:
  தமிழில் எப்படி/எவ்ளோ தூரம், வடசொல் புழங்க விடுவது? என்பதற்கான வரைமுறை

  *ஒலியொடு புணர்ந்த சொல் அல்ல!
  *எழுத்தொடு புணர்ந்த சொல்
  *எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே!

  ஏன், தொல்காப்பியர், வட “ஒலி” ஒரீஇ-ன்னு எழுதி இருக்கலாமே?
  அது என்ன வட “எழுத்து” ஒரீஇ? புணர்ச்சிக்கு ஒலி அடிப்படையா? எழுத்து அடிப்படையா?
  ——-

  ஒலியே எழுத்து! எழுத்தே ஒலி = Not all times!
  chennai, isai
  = அதே ச எழுத்து, ஒலி வேற-ன்னு பார்த்தோம் அல்லவா?

  *அவனுக்கு”ச்” சென்னை ஊர் = ச் மிகுது
  *இசை”ச்” செம்மல் = இங்கும் ச் மிகுது
  ஒன்னு cha, இன்னொன்னு sa ஒலி;
  இங்கே… ஒலியொடு புணர்ந்தவா? எழுத்தொடு புணர்ந்தவா?:)))

  தமிழ்ச் சினிமா = ச் வரணும்!
  ஏன்-ன்னா = எழுத்தொடு புணர்ந்த!

  (cinema என்பது மட்டுமே அயற்சொல்,
  sa,si ஒலி தமிழுக்கு அயல் ஓசை கிடையாது; isai, pasi)

  அது அயற்சொல்லே ஆனாலும்,
  தமிழில் புழங்கும் போது,
  தமிழ் எழுத்து வரை முறைகளுக்கு ஏற்பவே புணரும்!

  அயல் ஒலியை நீக்கச் சொல்லலை!
  அயல் எழுத்தை மட்டுமே நீக்கி, நம் எழுத்தொடு புணரச் சொல்கிறார் தொல்காப்பியர்

  //இங்கு தமிழ் எழுத்தாக மாற்றப்பட்ட வட எழுத்து வட சொல்லில் சேர்ந்து (புணர்ந்து) ஒலிப்பதைத் தான் கூறுகிறார்
  அப்படி மாற்றப்பட்ட வடசொல் மற்ற சொற்களுடன் புணர்வது பற்றி அவர் இங்கு பேசவில்லை//

  இங்கு தான், நூற்பாவை, ஒரு வரியில் மட்டும் படிக்காம…
  “முழுக்கவே” படிக்கணும்-ங்கிறது:) | Totality!

  அடுத்த நூற்பாவைப் பாருங்கள்..

  சிதைந்தன வரினும், இயைந்தன வரையார்
  அந் நாற் சொல்லும் தொடுக்கும் காலை,

  வலிக்கும் வழி வலித்தலும், மெலிக்கும் வழி மெலித்தலும்,
  விரிக்கும் வழி விரித்தலும், தொகுக்கும் வழித் தொகுத்தலும்,
  நீட்டும் வழி நீட்டலும், குறுக்கும் வழிக் குறுக்கலும்,
  நாட்டல் வலிய’ என்மனார் புலவர்.

  இப்படி ஒலிக்காக “மாற்றப்பட்ட” வட எழுத்தும்(பங்கஜம்= பங்கயம்)
  “மாற்றப்படாத” வட எழுத்தும் (கமலம்)..
  எதுவாயினும்… தமிழ் வழிப்படியே புணரும்!

  அந் நாற் சொல்லும் = இயற் சொல், திரி சொல், திசைச் சொல், வட சொல்
  வலிக்கும் வழி வலித்தலும், மெலிக்கும் வழி மெலித்தலும் = வல்லின/ மெல்லினப் புணர்ச்சி – தமிழ் அடிப்படைகளையே பின்பற்றும்! dot

  1. இங்கு தான், உங்க ஆதங்கம்/ அச்சம் எனக்குப் புரிகிறது..

   தமிழ்ச் சினிமா என்று எழுதினால்,
   சினிமா என்பதே தமிழ்ச் சொல்லாகிக் “கலந்து” விடுமோ என்ற உங்கள் அச்சம்:)))

   மிகவும் நியாயமான அச்சமே!
   ஆனா, உங்களுக்கே இந்த அச்சம் இருக்கும் போது,
   ஆதித் தமிழ்த் தந்தையான தொல்காப்பியருக்கு, இந்த அச்சம் இருந்திருக்காதா என்ன?

   மதம் என்னும் போர்வை போர்த்திக் கொண்டு, சம்ஸ்கிருதம், தமிழ் நிலத்துக்கு ஓரமாய் வந்து உட்கார்ந்து இருப்பதை அவர் அறிவார்!

   தமிழ் அரசியல்-அரசர்களை மயக்கி,
   உங்கள் மறம்= பாவம், சொர்க்கம் கிட்டாது,
   ஆனா பரிகாரம் செய்தால் கிட்டும்
   போன்ற மாயப் புராண மொழிகள் பரவத் தொடங்கும் காலமும் அவர் அறிவார்!

   பின்னே ஏன் இப்படிச் செஞ்சார்?
   He has a very valid point & knows the basis of linguistics!

   பின்னாளில் வணிக-அரசியல்-மதப் பரிமாற்றங்கள் காரணமாகக் “கலந்து” விட்டாலும்,
   பிற மொழிச் சொற்களைத், தமிழில் இருந்து,எளிதில் பிரித்து அறிய, ஒரு Tag போட்டுத் தான், இந்த Technique வகுத்து இருக்கிறார்!

   அது என்ன? என்பதை மேலும் சொல்வேன்..

  2. //ஒன்னு cha, இன்னொன்னு sa ஒலி;//
   chennai, chemmal இரண்டுமே CHA ஒலி தானே

   1. “செ”ன்னை = cha | இ”சை” = sa:)

    *வருமொழி முதலில், எப்பமே = cha தான்
    *நிலைமொழி, இடத்துக்குத் தக்கவாறு = sa or cha
    (அச்சு cha, பூசு= sa)
    ———

    இது வரை, தமிழ்ச் சொற்கள் மட்டுமே பார்த்தோம்..
    இப்போ, தமிழ் அல்லாத பிற சொற்கள், தமிழில் புழங்கி ஒலிப்பது பற்றியும் பார்ப்போம்:)

    Ex: கையைச் சண்முகன் பிடித்தான்

    ஷண்முகன் = வடசொல்
    தமிழில், சண்முகன் -ன்னு புழங்குது!

    பலரும், “Shan”mugam or “San”mugam என்று தான் ஒலிக்கிறார்கள்!
    “Chan”mugam என ஒலிப்போர் அரிதிலும் அரிது!

    ஆனா, எல்லாருமே எழுதும் போது,
    “என் கையைச்-சண்முகன்”
    ன்னு வலி மிகுத்தே எழுதுவர்கள்; ஏன்?

    =ஒலி மாறுபட்டாலும், “எழுத்தொடு” புணரும்!
    =ச எனும் வல்லின எழுத்தோடு தான் புணரணும்!

    தொல்காப்பியம் சொல்வது அஃதே!

    அந் நாற் சொல்லும் தொடுக்கும் காலை
    (இயற்சொல், திரி, திசை, வடசொல்)
    ….
    வலிக்கும் வழி வலித்தலும், மெலிக்கும் வழி மெலித்தலும்…
    …..
    “எழுத்தொடு” புணர்ந்த சொல் ஆகும்மே!
    ———

    இரண்டாம் வேற்றுமை – ஐ உருபில்
    *Chanmugam ன்னு ஒலிக்கும் போது மட்டுமே ச் போடு..
    *மற்றபடி Sanmugam ன்னு ஒலிச்சா, ச் போடாதே -ன்னு சொல்ல முடியுமா?:)

    எவன் எப்படி ஒலிப்பான்-ன்னு தெரிஞ்சா, ஒரு நூல் ஆசிரியர், புத்தகம் எழுதுவாரு?:)

    ஆதலால்..
    ஒலியைப் பொருத்தே வல்லினம் என்பது Too much stretch:))
    ச என்ற எழுத்து (எவன், எப்படி ஒலிச்சாலும்)= அது வல்லின எழுத்தே!

    அயலோசை:

    தமிழ்ச் சினிமா (Cinema)
    திருப்புகழ்ச் சண்முகர் (Shanmugar)
    எனக்குச் சந்தானம் (Santhanam)

    தமிழோசை:

    தமிழ்ச் சுவை (chuvai)
    திருப்புகழ்ச் சந்தம் (chantham)
    சென்னை to செந்தில் (chennai to chenthil)

    Hope this explains!
    This post took toooo much of my love time with u, Muruga:)
    Dont blame me; Blame Suren:))

 6. Last one! அச்சம்

  தமிழில் – பிறமொழிச் சொற்களைத்,
  தமிழ் விதிகளுக்கு உட்படுத்தி ஒலித்தால்..
  அவை, “தமிழ் போல்” ஆகி,
  “கலந்து விடும்” அபாயம் இருக்கே? – என்னும் அச்சம்:)

  Actually, The Reverse is Only True!
  தொல்காப்பியர் is a Language Scientist; He knows that!

  சம்ஸ்கிருதம்
  =மதம் என்னும் போர்வை போர்த்திக் கொண்டு
  =தமிழ் நிலத்துக்கு ஓரமாய் வந்து உட்கார்ந்து இருப்பதை தொல்காப்பியர் அறிவார்!

  தமிழ் அரசியல்:
  அரசர்களை மயக்கி,
  உங்கள் மறம்= பாவம், சொர்க்கம் கிட்டாது,
  ஆனா பரிகாரம் செய்தால்= புண்ணியம்; கிட்டும்
  …..
  ….. போன்ற மாயப் புராண மொழிகள் பரவத் தொடங்கி இருக்கும் காலமும் அவர் அறிவார்!

  *பெரு வழுதி = “பல் யாகசாலை” முதுகுடுமிப் பெருவழுதி ஆகி விட்டான்
  *பெருநற் கிள்ளி = “இராச சூய யாகம் வேட்ட” பெருநற் கிள்ளி ஆகி விட்டான்

  மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி..
  அதிகாரத்தை ஒட்டியே, அரசியலும் சமுதாயமும் செல்லும்!

  இதனால், பின்னாளில்..
  *அரசியல்
  *வணிகம்
  *மதம்
  என்னும் பரிமாற்றங்கள் “கலந்து” விடப் போகிறது என்பது தொல்காப்பியருக்கு நன்கு தெரியும்!

  Religion is a powerful tool that Sanskrit had;
  Tamizh doesnt have this tool;
  Tamizh is NOT based on புராணப் பொய்கள்;
  Itz core is சங்கத் தமிழ் இயற்கை வாழ்வு

  இயற்கை வாழ்வை விட, மினுமினுப்புக்கே Attraction:)
  இதை அறிந்தே, தொல்காப்பியர்..
  ஏதானாலும், தமிழின் Fundamentals அழிக்க முடியாதபடி, இயற்றிக் கொடுத்தார்;
  ————–

  பிற மொழிச் சொற்கள் கலந்தாலும்..
  தமிழில் இருந்து, எளிதில் பிரித்து அறிய..
  Identification Tag / Embedded Chip வச்சித் தான்,
  இந்த Technique வகுத்து இருக்கிறார்!

  1. ஜ-ஷ-ஸ-ஹ அயலோசைகள்,
  தமிழ் ஓசைகளாய், மாறித் தான் ஒலிக்க வேண்டும்!

  2. கிரந்த எழுத்து “புகாத” காலகட்டம்; எனினும்..
  வட எழுத்து -> தமிழ் எழுத்தாய், மாறித் தான் புழங்க வேண்டும்!
  = “வட எழுத்து ஒரீஇ,
  எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே”

  3. இதனால் வடசொல் சிதைந்தாலும் பரவாயில்லை!
  = “சிதைந்தன வரினும், இயைந்தன வரையார்”

  Our homeland, Our Rules; Not your Rules:)
  You coming here, Not we!

  Tamizh ன்னு நீங்க சொல்றீங்களா? Ta-mil தானே?
  அதே நியாயம் தான்!
  இங்கு மோடி தான்; மோதி இல்லை!

  தமிழில், ध dha (கந்தன்) உண்டு | द da இல்லை!
  मोदी -க்கு இங்கு ஒலி இல்லை; மோடி தான்!
  He himself writes Modi in English; ஆங்கிலத்தில், Modhi என்றா அவர் எழுதுகிறார்? அல்லவே!:)

  Our homeland, Our Rules; Not your Rules:)
  ————–

  இப்படி, தமிழ் “இயைபு”;
  அதற்கு உட்பட்டுத் தான், அந்நிய ஒலிகள் இங்கே புழங்க முடியும்!

  இந்தத் தொல்காப்பிய மரபு..
  = கிரந்த எழுத்து “புகுத்திய பின்பும்” கூட (5th CE Pallavas & Later Peak Chozhas)
  = தமிழ் இலக்கியம்/ கவிஞர்கள், இந்த மரபைக் கடைசி வரை காப்பாற்றிக் கொடுத்தார்கள்!

  வட புராணக் கதையைச் சொல்லும் கம்பன் கூட,
  வட ஓசையை = தமிழில் திணிக்க முடியாது!

  இலக்குவன் தான்; லக்ஷ்மணன் கிடையாது!
  = சிதைந்தன வரினும், ஒங்களுக்கு இயைந்தன வரைய மாட்டோம்!
  = ஆனானப் பட்ட கம்பனுக்கே இந்தக் கதி தான்! கம்பனாச்சே -ன்னு வளைந்து குடுக்காது தமிழ்!

  தமிழ்
  = மனிதத்துக்கு மட்டுமே வளையும்!
  = மதத்துக்கு வளையாது!

  1. Now only, You should understand “Reconciliation Technique” of a Language Scientist named தொல்காப்பியர்

   இப்படிச் “சிதைத்து”, ச் போட்டு, தமிழ்ச் சினிமா -ன்னு ஆக்கினால்..
   சினிமா என்ற சொல்லே, தமிழாகி விடுமோ? என்ற அச்சம் தேவையில்லை!

   சண்முகம் = ஒரு நாளும் தமிழ் ஆகாது!
   அது षण्मुख தான்!

   *விஷ்ணு, ஸ்கந்தன் = தமிழ்க் கடவுள் அல்லர்!
   *திருமால், கந்தன் = இவர்களே தமிழ்க் கடவுள்!
   (மாயோன், சேயோன்)

   இவர்கள் தமிழ் முன்னோர் நடுகற்கள்;
   புராணக் கதைகள், “அதே பேரிலேயே” ஏற்றப்பட்டு விட்டதால்…
   எது இருந்தது? எது வந்தது? -ன்னு மக்களுக்குத் தெரியாது போயிற்று!

   ஸ்கந்தன்-கந்தன் = ஒன்றே போல் தோன்றிடினும், பொருள் வேறு!
   *தமிழில் கந்தன் = கந்து (நடுகல், யானை கட்டும் கல்)
   *சம்ஸ்கிருத ஸ்கந்தன் = ஒன்றாக்கப்பட்டவன் (ஆறு முகமும்)

   தமிழில், இயற்கைக்கு மாறான ஆறு முகம், பத்துத் தலையெல்லாம் கிடையாது!
   சங்கத் தமிழ் = இயற்கை
   ————

   தமிழ் விதிகளுக்கு உட்பட்டு, அயலோசையைச் “சிதைத்து” எழுதினால்..
   *தமிழ்ச் சினிமா (Cinema)
   *சண்முகன் (Shanmuga)

   At any given point of time.. If u run a Reconciliation Report, between 2 languages..
   These words will show as “errors” in reconciliation; Then it is very easy to track the offsets
   (ppl in financials, can easily understand this technique)

   அதையே தொல்காப்பியரும் செய்கிறார்;
   தமிழில், ஒங்க சொல்லு புழங்கணுமா? = போடு, Id Tag/ Embedded Chip!
   நாளை பின்ன, Recon Report ஓட்டும் போது,
   மூலமொழிக்கும் – தமிழில் உள்ள அம்மொழிச் சொல்லுக்கும் “இடிக்கும்”
   ஒங்க “வார்த்தை”ல்லாம், “ஸ்பஷ்டமா”த் தெரியும் ஓய்:))

   Thatz the Beauty of தொல்காப்பியம்!
   முருகா, உன்னை விட, என் ஆதித் தமிழ் தந்தை தொல்காப்பியரே போற்றி!
   2000 yrs+, தமிழ் மரபைக் காத்துக் குடுக்கும் = தொல்காப்பியர் திருவடிகளே தஞ்சம்!

   [end of my comments:)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *