வெயில் படாத இருக்கையை முன்பதிவது எப்படி?

பேருந்தில் இடம்பிடிக்கையில் நம் அனைவருக்குள்ளும் உறங்கும் செல்டன் கூப்பர் விழித்துக்கொள்கிறான். அதுவும் காலியான பேருந்து என்றால் கேட்கவே வேண்டாம். செல்டன் கூப்பர் யாரென்று கேட்பவர்களுக்கு, இதோ “செல்டன் கூப்பர்: ஓர் எளிய அறிமுகம்”.

பேருந்து முன்பதிவு வலைதளங்களில் படத்தைப் பார்த்து எங்கே வெயில் படும் எங்கே படாது என்று உங்களால் சொல்ல முடியுமா? முடியும் என்றால் உங்களுக்கும் இந்தப் பதிவு தேவையில்லை. மற்றவர்கள் மேற்கொண்டு படிக்கவும். வெயில் படாத இடத்தில் முன்பதிவு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Continue reading “வெயில் படாத இருக்கையை முன்பதிவது எப்படி?”

சிங்கம் ஒன்று

இந்தப் பாட்ட மனசுல ஓட்டுங்க:

சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் – பொறந்திருக்கு
நேரம் – கனிஞ்சிருக்கு
ஊரும் – தெளிஞ்சிருக்கு
உண்மை – புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

இப்ப இது ?

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட
ஆமா – வில்லினில் பாட
ஆமா – வில்லினில் பாட
வந்தருள்வாய் கலைமகளே

ரிசர்வேசன்

“இந்த ரிசர்வேசனால தான்ங்க இந்தியா இன்னும் வளரும் நாடாவே இருக்கு”

“அப்ப ரிசர்வேசனுக்கு முன்னாடி இரெண்டாயிரம் வருசமா இந்தியா வளந்த நாடா இருந்துச்சா? பாலாறும், தேனாறும் ஓடுனுச்சா?”

கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்

அமேசானுக்குத் தமிழ் மொழி மேல் அப்படியென்ன மெத்தனமோ? புதிதாக கின்டில் பேப்பர்வைட் வாங்கி, ஆவலுடன் பிரித்து, ஒரு தமிழ் மின்னூலை தரவேற்றிப் படிக்க முனைந்தபோது பெருத்த ஏமாற்றம். மிக மோசமான எழுத்துரு!

கிண்டிலின் தமிழ் எழுத்துரு
கின்டிலின் தமிழ் எழுத்துரு

இந்த எழுத்துருவின் பழமையான வடிவம் கவர்ச்சியைத் தந்தாலும், நிறைவடையாத அரைகுரை இது. பல இடங்களில் மெருகேற்றம் தேவை.

நல்லவேளையாக, இந்த எழுத்துருத் தொல்லையை நிவர்த்தி செய்வது மிக எளிது. அமேசான், கின்டில் எழுத்துருக்களைத் தனிப்பயனாக்க ஒரு மறைமுக வழியை வைத்துள்ளது. அதன்படி இதற்குத் தேவையான கோப்புகளை zip வடிவில் இங்கே தரவேற்றியுள்ளேன்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இந்த zip கோப்பை அவிழ்த்து, அதில் உள்ள அடக்கங்களை உங்கள் கின்டிலுக்குக் கணினியின் உதவியுடன் மாற்றிவிட வேண்டியதுதான்.

கின்டில் உள்ளடக்கங்கள்
மாற்றியபின் கின்டிலின் உள்ளடக்கங்கள்

உங்கள் கின்டிலில் ஏற்கனவே உள்ள documents கோப்புறையைத் தவிர்த்து, புதிதாக fonts என்கிற கோப்புறையும், USE_ALT_FONTS என்கிற கோப்பும் இருக்கவேண்டும். இவற்றை உறுதி செய்தபின், கின்டிலை ஒருமுறை மறுதுவக்குங்கள். இதன் பின்னர் தமிழ் எழுத்துக்கள் புதிய எழுத்துருவில் தோன்றும்.

மெருகேற்றிய தமிழ் எழுத்துக்கள்
மெருகேற்றிய தமிழ் எழுத்துக்கள்

இந்த புதிய எழுத்துரு புத்தகத்தில் உள்ள தடிமன், சாய்மானம் ஆகியவற்றைக் கையாள வல்லது. மேலே உள்ள படங்களில் தலைப்புகளை உற்று நோக்கினால் வேறுபாட்டைக் காணலாம். இப்போது எழுத்துக்களின் அளவை தேவைக்கேற்ப மாற்றி படிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.

உங்கள் புதிய கின்டிலுடன் தமிழ்க்கடலில் நீந்திக் களிக்க வாழ்த்துக்கள்.

ஏறு தழுவல் தடை – ஒளிந்திருக்கும் அரசியல்

வரலாறு மற்றொருமுறை திரும்புகிறது; இம்முறை எறுதழுவலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையிலிருந்து.

மனித மற்றும் விலங்கு நல விரும்பிகள் சிலர் உண்மையிலே அக்கரையோடு இவ்விளையட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், இவர்களை வைத்துப் பிண்ணனியில் விளையாடுகிறது வேறொரு கூட்டம். அவர்களின் நோக்கம் மிக அற்பமானது. வரலற்றை திரிக்கும் கூட்டம் அது. அவர்களது நோக்கமும் அதுவே.

ஏறு தழுவுதல், காளைகளைப் போறிப் பாதுகாக்கும் தமிழ்த் தொண்மம். விளையாட்டை முறைப்படுத்தி விளையாடுகையில், மிருகவதை என்பதெல்லாம் மிகச்சில. மற்ற விளையாட்டுகளையும், கேரளா போன்ற நேரடி மாடுவதை கூடங்களையும் ஒப்பிடுகையில், இவ்விளையாட்டு மாட்டிற்க்கு நன்மை பயப்பதே.

https://www.youtube.com/watch?v=iRMtJgnvdQw

வரப்புயற நீருயரும் நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும் குடியுரக் கோனுயர்வான்

என்பது போலக் காளை, ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் பல நிலைகளைக் கடந்து உயிர் தரக்கூடியது. இக்காளைகளைக் காக்க, இவ்வினம் தழைக்க அதனைப்போற்றும் ஏறுதழுவுதலும் இன்றியமையாதது.

PETA வில் பல வடவர்களைக் காணமுடிகிறது. இவர்கள் அல்லது இவர்களின் பன்னால் இருப்பவர்கள் இலக்குகளில் முதன்மையானது இப்போது “வரலாற்றுத் திரிபு”.

தமிழ், சமஸ்கிருத்ததிற்கு முன் தோன்றிய மொழி என்பதற்கானச் சான்றுகள் தற்போது பல இடங்களிலிருந்து வந்த வண்ணம் உள்ளன. இவற்றை வடவர்களால் ஏற்க முடிவதில்லை. கருத்தாழமிக்கச் சான்றுகளையும் வரலாற்றுத்திரிபுகள் மூலம் நிராகரிக்க முயல்கின்றனர். ஆரியர் – திராவிடர் என்னும் கோட்பாட்டை உடைப்பது இவர்களின் முதல் இலக்கு. அதற்கும் ஏறுதழுவல் தடைக்கும் என்ன முடிச்சு என்கிறீர்களா? இதோ:

சிந்து சமவெளி - ஏறு தழுவல்
சிந்து சமவெளி – ஏறு தழுவல்

சிந்து சமவெளியில் கிடைத்த நாணயம் இது. இதில் ஒரு காளை தன் தலையைச் சிலுப்பி பல வீரர்களை தூக்கி எறிவதைக் காணலாம். இந்த நாணயம் வெளிவந்த சிந்து நாகரிகம் ரிக் வேத காலத்திற்கு முந்தயது. இந்த நாணயத்தில் உள்ள வடிவிலேயே இன்றளவிலும் இவ்விளையாட்டு வழங்கிவரும் ஒரே இடம் – நம் தமிழ்நாடு. எனவே சிந்து நகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட மொழி தொல்தமிழ் என்பது பல அறிஞர்களின் முடிந்த முடிபு. அப்படியானால் தமிழ், ரிக் வேதகாலத்திற்கு முன்னமே வழங்கிவரும் மொழியாகிறதல்லவா? இதுதான் இவர்களுக்கு மிகுந்த கவலையைத் தருகிறது. தமிழர்கள் இவர்களின் “பாரதத்தில்” இவர்களுக்கு முன்பிருந்தே வழங்கி வந்திருப்பது இவர்களால் ஏற்க முடிவதில்லை. சிந்து நாகரிகத்தை சமஸ்கிருதப்பூச்சு நடத்திக் கைப்பற்றுவது இவர்களின் நோக்கம். எனவேதான் சிந்து நாகரிகத்திற்க்கும் தமிழுக்கும் உள்ள முக்கிய பிணைப்பான ஏறு தழுவும் விளையாட்டை அழிக்க நினைக்கின்றனர். தமிழர்கள் இவ்விளையாட்டை மறந்த பின்னர் வரலாறு திரிக்கப்பட்டு, சிந்து நாகரிகம் வேதகாலத்துடன் இணைக்கப்படும வேண்டும்; சமஸ்கிருதத்தின் வயது அதிகரிக்கப்படுவேண்டும்; மேலும், தமழை ஒரு பகுதி மொழியாக்கி, சமஸ்கிருதத்திலிருந்து பிறந்த மொழி என முத்திரை குத்து வேண்டும்; இதுவே இக்கூட்டத்தின் தலையாயக் கடமை.

இணையத்தில் இவர்களின் செயல்பாட்டை உற்று நோக்கியே இம்முடிவிற்கு வரவேண்டியுள்ளது. சிந்து நாரிகம் எங்கெங்கெலாம் தமிழ் நாகரிகம் என முன்வைக்கப் படுகிறதோ அங்கெல்லாம் வடவரின் திரிபு முயற்சிகளைக் கடந்த சில வருடங்களாகக் கண்கூடாகக் காண முடிகிறது.

இவற்றையெல்லாம் சீர்துக்கிப்பார்த்து நாம் முடிவுகளை எடுக்கவேண்டும். வரலாற்றை இழப்பது நம் தமிழ் இனத்திற்கு பெருங்கேடாக முடியும். நாம் இரண்டாந்தர குடிமக்களாகும் தீங்கு வரலாற்றை இழப்பதாலும் மறப்பதாலும் நிகழும். அத்தகைய கேடு நமக்கு வேண்டாம்.

ஏறுதழுவலைக் காப்போம்; நாம் நாமாக இருப்போம்.

வெண்பா விளையாட்டு

#வெண்பாவிளையாட்டு : Ice bucket challenge போல ஒரு விளையாட்டை விளையாடுவோமா?

போட்டி இதுதான்:

யாராவது ஒருவர் உங்களுக்கு வெண்பா ஈற்றடி தருவார். அதை வைத்து ஒரு வெண்பா இயற்ற வேண்டும். மேலும் நீங்கள் ஒரு புதிய வெண்பா ஈற்றடியை உருவாக்கி இரு நபர்களுக்கு முன்னனுப்பி அவர்களை போட்டிக்கு அழைக்கவேண்டும்.

எவ்வகை வெண்பா வேண்டுமானாலும் இயற்றலாம். சமுக வலைத்தளங்களில் #வெண்பாவிளையாட்டு அல்லது #வெவி என்ற குறியீட்டை (tag) மறக்காமல் பயன்படுத்தவும்.

லினக்ஸ்.காமில் எனது பேட்டி

இந்த எளியவனின் கருத்து linux.com இன் இன்றய சிறப்புக் கட்டுரையில் (May 15, 2014) வெளிவந்திருக்கிறது.

My opinion interview on linux.com
Linux.com இன் சிறப்புக் கட்டுரையில் எனது கருத்து.

 

கட்டுரையின் உரலி: http://www.linux.com/news/enterprise/biz-enterprise/772853-linux-jobs-today-a-special-report

Continue reading “லினக்ஸ்.காமில் எனது பேட்டி”

வடசொல்லுக்கு வல்லினம் மிகுமா?

இந்தக் கீச்சிலிருந்து தான் விவாதம் ஆரம்பித்தது. நன்பர் KRS அவர்கள் நிறைய கேள்விகளை முன்வைத்தார். அவருக்கு மறுமொழி கூறுவதே இப்பதிவின் நோக்கம் (திறந்த மடல்). முழுவிவாதத்தைப் பார்க்க கீழே கீச்சில் உள்ளத் தேதியைச் சொடுக்கவும்.

தமிழ்ச் சினிமாவா? தமிழ் சினிமாவா? அதற்குச் செல்லும் முன்னர். சில அடிப்படை விளக்கங்கள் தரவேண்டியுள்ளது.

எழுத்து

எழுத்து என்பது என்ன? நன்னூலில் இது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

மொழி முதல் காரணம் ஆம் அணு திரள் ஒலி 
எழுத்து
- நன்னூல், 2.1.1:58

விளக்கம்: எழுத்து என்பது ஒலியணுக்கள் திரள்ந்து உருவாகும் ஓசை. இதுவே மொழிக்கு முதல் காரணம்.

ஆனால் பலர், எழுத்தின் வரிவடிவத்தையே எழுத்தாகப் பார்க்கின்றனர். இது தவறு. ஒலியை தான் எழுத்தாகக் கொளல் வேண்டும். வரிவடிவம்,  எழுத்தைக் குறிக்கும் ஒரு சின்னம் மட்டுமே.

தொல்காப்பியர் எழுத்து என்பது என்ன என்ற விளக்கத்தை நேரடியாகச் சொல்லவில்லை. ஆனால் ஓசைதான் என்பதைத் தொல்காப்பியம் முழுக்கவும் வலியுறுத்துகிறார். அனைத்தையும் கூற விழைந்தால் முழு தொல்காப்பியத்தையும் மேற்கோளிட வேண்டும். தொல்காப்பியம் முழுக்கவும் இசைப, மொழிப என்று வருகிறது. எழுத்திற்கு கால அளவை வரையறுக்கிறார். குறுக்கம், நீட்டம் பற்றி பேசுகிறார். இவை அனைத்தும் உச்சரிப்புக்கு உள்ள குணங்கள் அல்லவா?

இப்போது உங்கள் கேள்வி.

மொழிக்கே ஒலிதான் மூலம் எனும்போது புணர்ச்சி மட்டும் என்ன விதிவிலக்கா? புணர்ச்சி, குறுக்கம், அளபெடை, தொகை, யாப்பு அனைத்தையுமே ஒலியாக மட்டுமே கொள்ளவேண்டும். அப்ப எழுத்தாகக் கொள்ளக்கூடாதா? எழுத்தும் ஒலியும் ஒன்னு தானே. ஒலி தான் எழுத்து. எழுத்து தான் ஒலி. வேறு வேறல்ல. மேலே சுட்டியிருக்கும் நன்னூல் மேற்கோளே சான்று.

இவ்வளவு ஏன்? புணர்ச்சி பற்றி பேசும்போது நிலைமொழி வருமொழி என்று தானே கூறுகிறார்கள்? இங்கு மொழி என்பதன் பொருள் உச்சரிப்பு தானே. புணர்ச்சியை ஒலியாக மட்டுமே பார்க்கவேண்டும் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?

வல்லினம்

‘ச’ என்னும் சின்னம் cha,sa,sha என்று மூன்று எழுத்துக்களையும் இந்நாளில் குறிக்கப் பயன்படுகிறது. எனினும் இம்மூன்றில் எந்த ஒலி வல்லினம் என்பதைத்தான் ஆராய வேண்டியுள்ளது.

க, ச, ட, த, ப, ற இவை ஆறும் வல்லினம். இவற்றின் உச்சரிப்புக்களை தொல்காப்பியர் பிறப்பியலில் காட்டுகிறார். இங்கு நமக்குத் தேவானது ச வின் பிறப்பு.

சகார ஞகாரம் இடை நா அண்ணம். 
- தொல்காப்பியம் 1.3:8

விளக்கம்: ச,ஞ பிறக்கும் போது நாக்கின் நடுப்பகுதி மேல்வாயைத்தொட்டுப் பிறக்கும்.

எனவே ச என்னும் எழுத்து CHA  என்னும் ஒலியை மட்டுமே குறிக்கும். ஆக CHA என்னும் ஒலி மட்டும்தான் வல்லினம். SA-வும் SHA-வும் இப்படிப் பிறப்பதில்லை. வலித்தும் ஒலிப்பதில்லை. தொல்காப்பியர் நடையில் கூறினால் இவை இரண்டும் “நுனி நா அண்ணம்”.

ச என்னும் எழுத்தின் வரிவடிவத்தை மட்டும் வைத்துக் கொண்டு, இந்த வரிவடிவம் எந்தெந்த ஒலிகளைக் குறிக்கிறதோ அவையெல்லாம் வல்லினம் என்று கூறுவது தவறு.

நீங்கள் கூறுவது போல் அனைத்து உச்சரிப்பும் வல்லினம் ஆகாது.

புணர்ச்சி

இது நடைமுறையில் பலர் பின்பற்றும் ஒன்றுதான். உச்சரித்துப் பார்த்து வல்லினம் மிகுமா மிகாதா என்று சரிபார்ப்பது.  சரியான உச்சரிப்பில் படித்தால் வல்லினம் மிகுவதைத் தவிர்க்க முடியாது. அது இயற்கையாக நிகழும் ஒன்று.

இந்த இயற்கை நிகழ்வைத்தான் தொல்காப்பியர் இலக்கணமாக வடித்துள்ளார். தொல்காப்பியரே பல இடங்களில் இதை நேரடியாக எழுதியுள்ளார். இரண்டு மட்டும் இங்கே.

தம் ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை.
- தொல்காப்பியம் 1.7:58
ஒற்று இடை மிகா வல்லெழுத்து இயற்கை.
- தொல்காப்பியம் 1.7:61

மிகுமா மிகாதா?

நீங்கள் ‘சினிமா’ என்னும் சொல்லை chinimaa என்று வல்லின ஒலியுடன் உச்சரித்தால் மட்டுமே வல்லினம் மிகலாம். ஆனால் sinimaa என்று உச்சரித்தால் நிச்சயமாக வல்லொற்று இடுவது தவறு. ஏனெனில் ‘si’ வல்லெழுத்தல்ல.

நீங்கள் சுட்டியிருக்கும் தொல்காப்பிய மேற்கோள் பற்றி பேசுவோம்.

வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்.  
- தொல்காப்பியம் 2.9:5,6

வடசொல்லைப் பயன்படுத்தும்போது, அந்தச் சொல்லில் உள்ள வடவெழுத்துக்களை மட்டும் நீக்கி, அதற்கு இனையான தமிழ் எழுத்தை இடச்சொல்லுகிறார். இந்த மாற்றத்தில் உச்சரிப்பு சிதைந்தாலும் கிரந்த குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதமாடார்கள் என்று கூறுகிறார். இங்கு தமிழ் எழுத்தாக மாற்றப்பட்ட வட எழுத்து வட சொல்லில் சேர்ந்து (புணர்ந்து) ஒலிப்பதைத் தான் கூறுகிறார். அப்படி மாற்றப்பட்ட வடசொல் மற்ற சொற்களுடன் புணர்வது பற்றி அவர் இங்கு பேசவில்லை.

சுருக்கமாக sinimaa என்ற சொல் chinimaa என மாறும் என்று கூறுகிறார். ஆனால் இன்று பிரச்சனையே sinimaa, shinimaa, chinimaa மூன்றையுமே இந்தக் குறியீட்டில்தான் குறிக்கிறோம் – ‘சினிமா’. இந்தப் பயன்பாடு சர்சைக்குரியது. இதைப் பற்றிய திரு. சொக்கன் பதிந்திருக்கிறார்.

இந்தக் குழப்பம், ஒலியை எழுத்தாகப் பார்க்காமல், சின்னத்தை எழுத்தாகப் பார்த்தமையால்  வந்த வினை.

உலகத்தோடு ஒட்ட ஒழுகுவதா(சி=’chi,si,shi’) இல்லை தொல்காப்பியர் வழி நிற்பதா(si,shi=>சி=>chi) என்பது அறிஞர் பெருமக்கள்(தமிழர் மட்டும்) ஆய்விற்கு உட்படுத்தி தெளிவுபடுத்தப்பட வேண்டிய ஒன்று. அதுவரை வல்லொற்று இடுகையில், ஒலிப்பையும் கவனிப்போமாக.

அல்லது சினிமாவைத் தவிர்த்து திரைப்படம் என எழுதி கிரந்தம் தவிர்ப்போமாக.

எதிர்வழக்காடுகிறேன் என்று என்னையும் தவறாகக் கொள்ள வேண்டாம் 🙂

நன்றி.