கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்

அமேசானுக்குத் தமிழ் மொழி மேல் அப்படியென்ன மெத்தனமோ? புதிதாக கின்டில் பேப்பர்வைட் வாங்கி, ஆவலுடன் பிரித்து, ஒரு தமிழ் மின்னூலை தரவேற்றிப் படிக்க முனைந்தபோது பெருத்த ஏமாற்றம். மிக மோசமான எழுத்துரு!

கிண்டிலின் தமிழ் எழுத்துரு
கின்டிலின் தமிழ் எழுத்துரு

இந்த எழுத்துருவின் பழமையான வடிவம் கவர்ச்சியைத் தந்தாலும், நிறைவடையாத அரைகுரை இது. பல இடங்களில் மெருகேற்றம் தேவை.

நல்லவேளையாக, இந்த எழுத்துருத் தொல்லையை நிவர்த்தி செய்வது மிக எளிது. அமேசான், கின்டில் எழுத்துருக்களைத் தனிப்பயனாக்க ஒரு மறைமுக வழியை வைத்துள்ளது. அதன்படி இதற்குத் தேவையான கோப்புகளை zip வடிவில் இங்கே தரவேற்றியுள்ளேன்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இந்த zip கோப்பை அவிழ்த்து, அதில் உள்ள அடக்கங்களை உங்கள் கின்டிலுக்குக் கணினியின் உதவியுடன் மாற்றிவிட வேண்டியதுதான்.

கின்டில் உள்ளடக்கங்கள்
மாற்றியபின் கின்டிலின் உள்ளடக்கங்கள்

உங்கள் கின்டிலில் ஏற்கனவே உள்ள documents கோப்புறையைத் தவிர்த்து, புதிதாக fonts என்கிற கோப்புறையும், USE_ALT_FONTS என்கிற கோப்பும் இருக்கவேண்டும். இவற்றை உறுதி செய்தபின், கின்டிலை ஒருமுறை மறுதுவக்குங்கள். இதன் பின்னர் தமிழ் எழுத்துக்கள் புதிய எழுத்துருவில் தோன்றும்.

மெருகேற்றிய தமிழ் எழுத்துக்கள்
மெருகேற்றிய தமிழ் எழுத்துக்கள்

இந்த புதிய எழுத்துரு புத்தகத்தில் உள்ள தடிமன், சாய்மானம் ஆகியவற்றைக் கையாள வல்லது. மேலே உள்ள படங்களில் தலைப்புகளை உற்று நோக்கினால் வேறுபாட்டைக் காணலாம். இப்போது எழுத்துக்களின் அளவை தேவைக்கேற்ப மாற்றி படிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.

உங்கள் புதிய கின்டிலுடன் தமிழ்க்கடலில் நீந்திக் களிக்க வாழ்த்துக்கள்.

ஏறு தழுவல் தடை – ஒளிந்திருக்கும் அரசியல்

வரலாறு மற்றொருமுறை திரும்புகிறது; இம்முறை எறுதழுவலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையிலிருந்து.

மனித மற்றும் விலங்கு நல விரும்பிகள் சிலர் உண்மையிலே அக்கரையோடு இவ்விளையட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், இவர்களை வைத்துப் பிண்ணனியில் விளையாடுகிறது வேறொரு கூட்டம். அவர்களின் நோக்கம் மிக அற்பமானது. வரலற்றை திரிக்கும் கூட்டம் அது. அவர்களது நோக்கமும் அதுவே.

ஏறு தழுவுதல், காளைகளைப் போறிப் பாதுகாக்கும் தமிழ்த் தொண்மம். விளையாட்டை முறைப்படுத்தி விளையாடுகையில், மிருகவதை என்பதெல்லாம் மிகச்சில. மற்ற விளையாட்டுகளையும், கேரளா போன்ற நேரடி மாடுவதை கூடங்களையும் ஒப்பிடுகையில், இவ்விளையாட்டு மாட்டிற்க்கு நன்மை பயப்பதே.

https://www.youtube.com/watch?v=iRMtJgnvdQw

வரப்புயற நீருயரும் நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும் குடியுரக் கோனுயர்வான்

என்பது போலக் காளை, ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் பல நிலைகளைக் கடந்து உயிர் தரக்கூடியது. இக்காளைகளைக் காக்க, இவ்வினம் தழைக்க அதனைப்போற்றும் ஏறுதழுவுதலும் இன்றியமையாதது.

PETA வில் பல வடவர்களைக் காணமுடிகிறது. இவர்கள் அல்லது இவர்களின் பன்னால் இருப்பவர்கள் இலக்குகளில் முதன்மையானது இப்போது “வரலாற்றுத் திரிபு”.

தமிழ், சமஸ்கிருத்ததிற்கு முன் தோன்றிய மொழி என்பதற்கானச் சான்றுகள் தற்போது பல இடங்களிலிருந்து வந்த வண்ணம் உள்ளன. இவற்றை வடவர்களால் ஏற்க முடிவதில்லை. கருத்தாழமிக்கச் சான்றுகளையும் வரலாற்றுத்திரிபுகள் மூலம் நிராகரிக்க முயல்கின்றனர். ஆரியர் – திராவிடர் என்னும் கோட்பாட்டை உடைப்பது இவர்களின் முதல் இலக்கு. அதற்கும் ஏறுதழுவல் தடைக்கும் என்ன முடிச்சு என்கிறீர்களா? இதோ:

சிந்து சமவெளி - ஏறு தழுவல்
சிந்து சமவெளி – ஏறு தழுவல்

சிந்து சமவெளியில் கிடைத்த நாணயம் இது. இதில் ஒரு காளை தன் தலையைச் சிலுப்பி பல வீரர்களை தூக்கி எறிவதைக் காணலாம். இந்த நாணயம் வெளிவந்த சிந்து நாகரிகம் ரிக் வேத காலத்திற்கு முந்தயது. இந்த நாணயத்தில் உள்ள வடிவிலேயே இன்றளவிலும் இவ்விளையாட்டு வழங்கிவரும் ஒரே இடம் – நம் தமிழ்நாடு. எனவே சிந்து நகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட மொழி தொல்தமிழ் என்பது பல அறிஞர்களின் முடிந்த முடிபு. அப்படியானால் தமிழ், ரிக் வேதகாலத்திற்கு முன்னமே வழங்கிவரும் மொழியாகிறதல்லவா? இதுதான் இவர்களுக்கு மிகுந்த கவலையைத் தருகிறது. தமிழர்கள் இவர்களின் “பாரதத்தில்” இவர்களுக்கு முன்பிருந்தே வழங்கி வந்திருப்பது இவர்களால் ஏற்க முடிவதில்லை. சிந்து நாகரிகத்தை சமஸ்கிருதப்பூச்சு நடத்திக் கைப்பற்றுவது இவர்களின் நோக்கம். எனவேதான் சிந்து நாகரிகத்திற்க்கும் தமிழுக்கும் உள்ள முக்கிய பிணைப்பான ஏறு தழுவும் விளையாட்டை அழிக்க நினைக்கின்றனர். தமிழர்கள் இவ்விளையாட்டை மறந்த பின்னர் வரலாறு திரிக்கப்பட்டு, சிந்து நாகரிகம் வேதகாலத்துடன் இணைக்கப்படும வேண்டும்; சமஸ்கிருதத்தின் வயது அதிகரிக்கப்படுவேண்டும்; மேலும், தமழை ஒரு பகுதி மொழியாக்கி, சமஸ்கிருதத்திலிருந்து பிறந்த மொழி என முத்திரை குத்து வேண்டும்; இதுவே இக்கூட்டத்தின் தலையாயக் கடமை.

இணையத்தில் இவர்களின் செயல்பாட்டை உற்று நோக்கியே இம்முடிவிற்கு வரவேண்டியுள்ளது. சிந்து நாரிகம் எங்கெங்கெலாம் தமிழ் நாகரிகம் என முன்வைக்கப் படுகிறதோ அங்கெல்லாம் வடவரின் திரிபு முயற்சிகளைக் கடந்த சில வருடங்களாகக் கண்கூடாகக் காண முடிகிறது.

இவற்றையெல்லாம் சீர்துக்கிப்பார்த்து நாம் முடிவுகளை எடுக்கவேண்டும். வரலாற்றை இழப்பது நம் தமிழ் இனத்திற்கு பெருங்கேடாக முடியும். நாம் இரண்டாந்தர குடிமக்களாகும் தீங்கு வரலாற்றை இழப்பதாலும் மறப்பதாலும் நிகழும். அத்தகைய கேடு நமக்கு வேண்டாம்.

ஏறுதழுவலைக் காப்போம்; நாம் நாமாக இருப்போம்.